இன்றைய வணக்கம் தாயகம் நிகழ்ச்சியில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம், அழிபாடுகளுடன் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் புராதன தமிழர் தொல்லியல் இடங்கள் பல, கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆவணப்படுத்தப்பட முடியாத நிலைமையில் அழிந்தும், மறந்தும், மறைந்தும் காணப்பட்டன.

இவ்வாறான சூழ்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் உதவியுடன் மன்னார் கட்டுக்கரை, திருகோணமலை திருமங்களாய் போன்ற மரபுரிமைச்சின்னங்கள் சக்தி FM இனால் அடையாளப்படுத்தப்பட்டு வானலையில் ஆவணப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் 16.07.2019 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவரும் தொல்லியல்துறை இணைப்பாளருமான சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களின் தலைமையில் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேசமான குருந்தன் குளம் பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆராயும்போது, இவ்விடம் சிங்கள இலக்கியமான இராஜாளி மற்றும் பாளி நூலான சூளவம்சம் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் ‘குருந்தி’ என்ற இடமாக இருக்கலாம் என பேராசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் ‘சாவகனுக்கும்’ இவ்விடத்திற்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதை மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட இவ்வாலயத்தில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், அந்தராளம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றுடன், விநாயகர், நாக விக்கிரகங்கள் மற்றும் பழைமையான சுவர்களும் தூண்களும் காணப்படுகின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்களை வணக்கம் தாயகம் நிகழ்ச்சியினூடாக விரைவில் எதிர்பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *