இத்தாலியில் நடைபெற்ற விராட் – அனுஷ்கா திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் காதல் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களின் திருமணம் தொடர்பான பல்வேறு செய்திகள் வெளியானவண்ணம் இருந்தன.

டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் கடந்த 6-ந்தேதி முடிவடைந்தது. அதில் இருந்து கோலிக்கு சுமார் 20 நாட்கள் வரை ஓய்வு உள்ளது. இந்த நேரத்தில் அவருக்கும் அனுஷ்கா சர்மாவிற்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வைத்து திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இத்தாலி நாட்டின் டஸ்கனி பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற போர்கோ பினோசிட்டோ என்ற இடத்தில் விராட் கோலி-அனுஷ்கா திருமணம் நடைபெற்றது. 100-க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இந்த டஸ்கனி பிராந்தியத்தில் உள்ள சின்னஞ்சிறிய பிபியானோ கிராமத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்து இந்தியா வரும் விராட்-அனுஷ்கா தம்பதி, மும்பையில் விரைவில் ஆடம்பரமாக வரவேற்பு விழாவை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.