புதிய முயற்சியில் இறங்கியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் – Shakthi FM

புதிய முயற்சியில் இறங்கியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது இசைக்கு அப்பாற்பட்ட புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘Le Musk’ என்ற படத்தை வெர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறார். அவரே இசையமைக்கும் இந்தப் படம் ரோம் நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இசையமைப்பாளராக சாதனை படைத்து ஆஸ்கர் விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஹொலிவுட்டிலும் இசை அமைத்தார். இப்போது இயக்குநராகி இருக்கிறார்.

இதுபற்றி அவர் தெரிவித்ததாவது,

25 வருடங்களுக்கு முன்பு ‘ரோஜா’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான போது எப்படி இருந்தேனோ இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். அப்போது மணிரத்னமும், என்னுடைய குடும்பத்தாரும் மட்டும் தான் எனக்கு ஆதரவாக இருந்தனர். இப்போது பலருடைய ஆதரவும் எனக்கு இருக்கிறது. இந்த படம் புதிய தொழில் நுட்பத்தில் உருவாகிறது. இது ஒரு புதிய சோதனை முயற்சி. இந்த வி.ஆர்.தொழில்நுட்பத்தை மக்கள் எப்படி ரசிக்கப்போகிறார்கள் என்பதில் தான் எனது எண்ணம் இருக்கிறது. படம் பற்றிய கருத்துக்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். `பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படங்களை எடுக்க இங்கு பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். என்னிடம் 200 கோடி பட்ஜெட் எல்லாம் இல்லை

என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இன்னொரு படத்தையும் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குகிறார். இது ‘வி.ஆர்.மூவி பேஸ்’ என்ற புதிய முறையில் இந்திய நடனம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படமாக உருவாகிறது.