இலங்கையின் பிரபல நடிகரும் நாடக எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் காலமானார் – Shakthi FM

இலங்கையின் பிரபல நடிகரும் நாடக எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் காலமானார்

இலங்கையின் பிரபல நடிகரும் நாடக எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் காலமானார்

இலங்கையின் பிரபல தமிழ்த் திரைப்பட, வானொலி, தொலைக்காட்சி நடிகரும் நாடக எழுத்தாளருமான எஸ். ராம்தாஸ் சென்னையில் இன்று காலமானார்.

சிறிது காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் அன்னார் தனது 69 ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒலிபரப்பான கோமாளிகள் மற்றும் கும்மாளம் ஆகிய வானொலி நாடகங்களில் மரிக்கார் என்ற முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மரிக்கார் ராம்தாஸ் எனும் பெயரால் அவர் அழைக்கப்பட்டார்.

“கோமாளிகள் கும்மாளம்” என்ற தொடர் இவரது கதை வசனத்தில் “கோமாளிகள்” எனும் பெயரில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் நகைச்சுவை திரைப்படம் என்ற அடையாளத்தைப் பெற்றது.

2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பான மீண்டும் மீண்டும் கோமாளிகள் எனும் நாடகத்தை எழுதி இயக்கி அதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றும் மரிக்கார் ராம்தாஸ் நடித்திருந்தார்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட அநேகமான உள்ளூர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர வேடங்களிலும் மரிக்கார் ராம்தாஸ் நடித்துள்ளார்.

உள்ளூரில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியிலும் மரிக்கார் ராம்தாஸ் என பலராலும் அறியப்பட்ட அன்னார், சில மாதங்களாக சுகவீனமுற்ற நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானமை குறிப்பிடத்தக்கது.